மூடுக

காணத்தக்க இடங்கள்

அய்யனார் அருவி, இராஜபாளையம்

அய்யனார் அருவி

அய்யனார் அருவி

அய்யனார் அருவி, இராஜபாளையம் நகருக்கு மேற்கே பத்து கி.மீ தொலைவிலமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கே கிழக்கு சரிவுகளில் உள்ளது. பருவ மழையே இவ்வருவிக்கு ஆதாரமாகும். இவ்வருவியின் நீர், மிகவும் தூய்மையாக இருக்கும் என நம்பப்படுவதால் அருகிலுள்ள கிராமங்களுக்கு குடிநீராக பயன்படுத்தப்படுவதுடன் சுற்றுப்பகுதியுலுள்ள விவசாயிகளால் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. அய்யனார் அருவிக்கு அருகிலுள்ள வனப்பகுதி சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் மேற்கொள்ள சிறந்த இடமாகும். அருவிக்கு அருகே அய்யனார் கோயில் எனும் சிறு காட்டுக்கோயில் உள்ளதால் இவ்வருவிக்கு அய்யனார் அருவி எனும் பெயர் வழங்கப்படுகிறது.

இவ்வருவி தமிழ்நாடு வனத்துறை மற்றும் இராஜபாளையம் நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால், இவ்வருவி இயற்கையின் பிரமாண்டத்தைக் கண்டு மகிழத்தக்க இடமாக உள்ளது. அய்யனார் அருவிக்கு மலையேற்றம் செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். அருவியை அடைய ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஆகும். இந்த வனம் யானைகள், நரைமுடி உள்ள அணில் மற்றும் வரையாடுகளின் இருப்பிடமாக உள்ளதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இவ்வனம் யானைகளின் இருப்பிடமாக உள்ளதால் உள்ளே செல்பவர்கள் சூரியன் மறைவுக்குமுன் திரும்புவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இராஜபாளையத்திலிருந்து அரசு பேருந்து மூலம் அய்யனார் அருவிக்கு சென்றடையலாம்.

ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் சிறந்த மற்றும் பழமை வாய்ந்த, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விஷ்ணு கடவுளின் உறைவிடமான இந்து கோயிலாகும். இவ்வூர், ஆழ்வார்களில் இரு மிக முக்கியமானவர்களான பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் பிறந்த ஊராகும். வைஷ்ணவர்கள் மற்றும், பக்தர்களுக்கு விஷ்ணு, பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகியோர் சமமாகவே கருதப்படுகின்றனர். இக்கோயிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளும் பழங்கால ஓவியங்களும், கலையை விரும்பும் எந்தவொரு நபருக்கும் அனுபவித்து மகிழக்கூடிய இடமாகும்.இவ்வூர் ஆண்டாளின் ‘திருப்பாவை’யையும், பெரியாழ்வாரின் ‘திருப்பல்லாண்டை’யும், விஷ்ணுவின் மீதான பாசுரங்களை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியுள்ளது. இத்தமிழ்பாடல்கள், தமிழ் வேதம் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள் ஆகியவை இக்கோயிலில் தினமும் பாடப்படுகின்றன. பஞ்சமூர்த்திகள், தும்புருக்கள், நாரதர், சனத்குமாரர், கின்னர், மிதுனர்கள், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் ரங்கமன்னார் மற்றும் அவரது காலடியில் நின்றிருக்கும் பிரதிநிதிகளான வில்லி மற்றும் புட்டன் ஆகியோரை சுற்றி காணப்படுகின்றனர். கடவுள் தனது படுத்திருக்கும் நிலையிலிருந்து பார்ப்பதற்காக கருவறையில் மூன்று கதவு நிலைகள் உள்ளன. மேலேறும் மாடிப்படிகள் கருவறைக்கு செல்கிறது. அதன் கீழுள்ளவை புராணங்களின் நிகழ்ச்சிகளை அலங்கரிக்கும் விதமாக விவரமான மரச்சிற்பங்கள் அடங்கிய, வியக்கத்தக்க பெரிய மண்டபத்திற்கு செல்கிறது. இம்மரச்சிற்பங்கள் மேற்கூரைக்கு அலங்காரமாகவும், உறுதுணையாகவும் உள்ளது. இக்கோயிலில் ‘தென்கலை’ வழிபாடு முறையை பின்பற்றுகிறது.

ஆண்டாள் கோவில் தேரோட்டம்

ஆண்டாள் கோவில் தேரோட்டம்

இக்கோயில் மதுரையிலிருந்து 74 கி.மீ தூரத்தில் இராஜபாளையத்திற்கு மிக அருகில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகருக்குள் உள்ளது. இக்கோயில் கோபுரம் ‘தமிழ்நாடு அரசின் இலச்சினையாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. முதல் பகுதி வரபத்ர சயனார் கோயில் என்றும் இரண்டாம் பகுதி ஆண்டாள் சன்னதி என்றும் அழைக்கப்படுகிறது. வரபத்ர சயனார் கோயில் இங்கு ஆட்சி செய்த வில்லி மன்னரால் கட்டப்பட்டது. உயரமான கோபுரம் குருபரம்பரை மரபுகளின் படி, பாண்டிய அரசன் வல்லவ தேவன் வழங்கிய உதவிகளைக் கொண்டு பெரியாழ்வாரால் (கி.பி 765 – 815) கட்டப்பட்டது. இதேபோல் ஆண்டாள் சன்னதி பாண்டிய வம்சத்தின் பல்வேறு அரசர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டது.பாண்டிய அரசர்களின் அடையாளமான மீன் சின்னத்தை இப்போதும் கூரையில் பார்க்கலாம். திருமலை நாயக்க மன்னர் பல புனரமைப்புகளை மேற்கொண்டுள்ளார்.”சுக்கிரவார குறடு” பகுதியில் திருமலை நாயக்கர் ,அவரது சகோதரர் சென்னப்ப நாயக்கர் மற்றும் அவர்களது மனைவிகளின் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூரம் பண்டிகையில் பங்கேற்கின்றனர்.அதிகாலையில் சிறப்பு பூஜைகளுக்குப்பிறகு, மூலவர்கள், ஸ்ரீரங்கமன்னார், தேவி மற்றும் ஆண்டாள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

 

சதுரகிரி மலை, ஸ்ரீவில்லிப்புத்தூர்

சதுரகிரி மலை, ஸ்ரீவில்லிப்புத்தூர்

சதுரகிரி மலை, ஸ்ரீவில்லிப்புத்தூர்

சதுரகிரி என்று அறியப்படும் சுந்தரமகாலிங்கம் கோயில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் வத்திராயிருப்பு எனும் இடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, சதுரகிரியின் பெயர் சதுர்(4) வேதம் + கிரி, அதாவது நான்கு வேதங்களும் சந்தித்து, மலையை உருவாக்கின என்று அறியப்படுகிறது. இங்குள்ள மலை சதுர வடிவில் இருப்பதால் ‘சதுரகிரி’ என மற்றொரு பொருளும் உள்ளது. இம்மலை கடவுளின் இல்லம் ஆகும். இது ‘மகாலிங்க மலை’ எனவும் ‘சித்தர்களின் பூமி’ எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இம்மலை, சித்தர்கள் இன்னும், சிவனை வழிபட்டு வரும் மர்மமான மலை எனவும் நம்பப்படுகிறது.

பொதுமக்கள் மாதத்தில் ஆறு நாட்களுக்கு மட்டுமே, அதாவது அமாவாசை நாட்களில் மூன்று நாட்களும், பௌர்ணமி நாட்களில் மூன்று நாட்களும் மட்டுமே மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் (அமாவாசை, பௌர்ணமி மற்றும் இவற்றின் முன்பின் நாட்கள்). சதுரகிரி காட்டில் பக்தர்கள் நீராதாரங்களை மாசுபடுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தவிர்ப்பது நல்லது. முதன்முறையாக மலை ஏறுபவர்கள் மலை உச்சியை அடைவதற்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஆகும். மற்றவர்கள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் மலை உச்சியை அடையலாம். இங்கு மின்சாரம் இல்லை. பி.எஸ்.என்.எல்-இன் WL/L மற்றும் செல்போன் தொலைபேசிகளுக்கு மட்டுமே இணைப்புகள் கிடைக்கும். இங்கு அமாவாசை, பௌர்ணமி மற்றும் சில பண்டிகை நாட்களில் மட்டும் மோர், காபி, டீ மற்றும் சிற்றுண்டி வகைகள் விற்கும் சில கடைகளை காணலாம். கோயில்கள் மற்றும் அங்குள்ள தங்கும் இடங்களுக்கு அருகில், காலை முதல் இருள் சூழ்வதற்கு முன் வரை பக்தர்களுக்கு அன்ன தாணம் வழங்கப்படுகிறது. மலையில் அடிப்படை வசதிகளும் உள்ளது.