மூடுக

மாவட்டம் பற்றி

மாவட்டம் பற்றிய கண்ணோட்டம்

விருதுநகர் மாவட்டம் முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து,  அரசு ஆணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 இன் படி பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது.  விருதுநகர் மாவட்டம் கர்மவீரர் காமராஜர் மாவட்டம் என்றழைக்கப்பட்டது.

இம்மாவட்டம் தமிழ்நாட்டில் தென்பகுதியில் அமைந்துள்ளது.  இம்மாவட்டத்தின் வடக்கில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும், தெற்கில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் மற்றும்  வடமேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.  இதன் நிர்வாகத்தலைமையிடம் விருதுநகர் நகருக்குள் அமைந்துள்ளது.

இம்மாவட்டம் மூன்று வருவாய்க்கோட்டங்களையும்,  ஒன்பது வட்டங்களையும், முப்பத்தொன்பது ஃபிர்க்காக்களையும் (குறுவட்டங்கள்) அறநூறு  வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதைச்சுற்றி அமைந்துள்ள தீப்பெட்டித்தொழிற்சாலைகள், பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் அச்சுக்கூடங்களால் இந்நாட்டின் வளர்ச்சியில் முன்னிலையில் உள்ளது. இங்கு விருதுநகர் மற்றும் இராஜபாளையம் என இருபெரும் வாணிக மையங்கள் உள்ளன.

விருதுநகர், எண்ணெய், சிக்கரி, காபி, மிளகாய் மற்றும் பருப்பு வகைகளுக்கு முக்கிய சந்தை நகரமாக விளங்குகிறது. இராஜபாளையம், பருத்தி ஆலைகள், நூற்பாலைகள், விசைத்தறி ஆலைகளைக்கொண்டு, கோயம்புத்தூருக்கு அடுத்த இரண்டாவது பெரிய நெசவு நகரமாக திகழ்கிறது.

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் ஆர் ஆர் நகரிலும் இரண்டு பெரிய சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.